×

கோபி அருகே ரூ.1 கோடியில் ஜிம்னாஸ்டிக் மையம்

*பரிசளிப்பு விழாவில் கலெக்டர் தகவல்

ஈரோடு : ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டுப்பாளையம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் ஜிம்னாஸ்டிக் மையம் அமைக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் துவங்கி மார்ச் மாதம் 10ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடந்தது. இதில் பொதுப்பிரிவு, பள்ளி பிரிவு, கல்லூரி பிரிவு, மாற்றுத்திறனாளிக்கான பிரிவு மற்றும் அரசு ஊழியர் பிரிவுகளுக்கு 42 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட அளவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு விழா நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து, 1,600க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு, சான்றிதழ், பதக்கங்களை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசு ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ.41 லட்சத்து 58 ஆயிரம் ரொக்கமும், மண்டல அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.41 லட்சத்து 82 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.83 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் ரூ.7.57 கோடி மதிப்பில் செயற்கை இழையிலான ஓடுதள பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதி ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கோபி கரட்டுப்பாளையம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் ஜிம்னாஸ்டிக் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் 2 ஏக்கர் நில பரப்பளவில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனக்கும் விளையாட்டு அதிகம் பிடிக்கும். சமீபத்தில் இந்திய ஆட்சி பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட 6 அணிகள் கால்பந்து போட்டி நடந்தது. அதில், நானும் பங்கேற்று விளையாடிய இந்திய ஆட்சிப்பணி அணி போட்டியில் முதல் பரிசு பெற்று தங்கம் வென்றோம். அதனால், இங்குள்ள கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு எனது தனிப்பட்ட பாராட்டுகள். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

தொடர்ந்து, எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்தபோது, விளையாட்டு என்றால் ஹாக்கி மட்டும் தான் தெரியும். ஒலிம்பிக்கில் பங்கேற்று நம் நாடு ஹாக்கி போட்டியில் மட்டும் தான் பதக்கம் பெறும். இன்றைக்கு அந்த நிலை மாறி அனைத்து போட்டிகளிலும் இந்தியாவை சேர்ந்தவர்கள் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கம் பெறுகின்றனர். அதில், சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் இந்திய அளவில் 10 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என்றால் விளையாட்டு துறையில் நாம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்பது புரியும். தமிழகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்த முதல்வர் நடவடிக்கை எடுத்தார்.

அதன்பேரில், உலக அளவிலான செஸ் போட்டியும் தமிழகத்தில் நடத்தினார். விரைவில் தமிழகத்தில் ஹாக்கி போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், வெற்றி பெறாதவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து டென்னிஸ் வீரர் கிறிஸ்டோ, கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி போல நீங்கள் சார்ந்த விளையாட்டு போட்டிகளில் சிறந்த வீரர்களாக வேண்டும். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஷ்குமார், மண்டல தலைவர் சுப்பிரமணியம், 36வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில், உடற்கல்வி ஆய்வாளர் சாலமன், விளையாட்டு பயிற்சியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநில போட்டி ஜூலை 1ம் தேதி துவக்கம்

மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்த வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாநில போட்டிகள் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

The post கோபி அருகே ரூ.1 கோடியில் ஜிம்னாஸ்டிக் மையம் appeared first on Dinakaran.

Tags : Gymnastic Center ,Gobi ,Erode ,Karapapalayam ,Gobi, Erode District ,Gymnastic ,Center ,Dinakaran ,
× RELATED கோபி அருகே ஒத்தக்குதிரையில்...